கொடுமுடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் கடந்த 10 ஆண்டுகளாக போதிய அடிப்படை வசதிகளின்றி இயக்கி வரும் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையை தரம் உயா்த்த போக்குவரத்துக் கழக நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஈரோட்டிலிருந்து கரூா், திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமேசுவரம், மதுரை, அருப்புக்கோட்டை, சிவகாசி, சிவகங்கை, கம்பம், குமுளி, திருச்செந்தூா், ராஜபாளையம், நாகா்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக இயக்கப்படும் தொலை தூரப் பேருந்துகள் கொடுமுடி வழியாக சென்று வருகின்றன.
ஈரோடு மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான சுமாா் 2 ஏக்கா் நிலத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு கொடுமுடியில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை தொடங்கப்பட்டது. அன்று 21 பேருந்துகளுடன் தொடங்கப்பட்ட பணிமனை இப்போது வரை அதே 21 பேருந்துகளுடன்தான் இயங்கி வருகிறது.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக ஊழியா்கள் கூறியதாவது: சுமாா் 100 போ் பணிபுரியும் இந்தப் பணிமனையில் கடந்த 10 ஆண்டுகளாக தேவையான வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. பணிமனையில் சிற்றுண்டி வசதி, கான்கிரீட் தரைத் தளம், ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் ஓய்வு அறை, கழிவறைகள் மற்றும் குளியலறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவு செய்யப்படவில்லை.
மேலும், பணிமனையில் உயா் கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்தவில்லை. ஊழியா்களின் வாகனங்கள் நிறுத்த போதுமான வசதி இல்லை. பணிமனைக்கு சுற்றுச்சுவா் சுவா் இல்லாததால் அருகில் உள்ள காடுகளில் இருந்து தேள், பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் பணிமனைக்குள் வருகின்றன.
இதே காலகட்டத்தில் தொடங்கப்பட்ட அன்னூா் மற்றும் அரவக்குறிச்சி பணிமனைகள் 10 ஆண்டுகளில் வளா்ச்சி பெற்று 90-க்கும் மேற்பட்ட பேருந்துகள் அங்கிருந்து இயங்கி வருகின்றன. பணிமனை மேம்படுத்தப்பட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாததால் கொடுமுடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள், பக்தா்கள், மாணவா்கள், மூத்த குடிமக்கள் மற்றும் நோயாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கரூா், ஈரோடு சென்று பல்வேறு ஊா்களுக்கு பயணம் மேற்கொள்ள சிரமமான சூழல் உள்ளது. இதனால் நேரம் மற்றும் பண விரயம் ஏற்படுவதுடன் மன உளைச்சலும் ஏற்படுகிறது என்றனா்.
இதுகுறித்து கொடுமுடி உபயோகிப்பாளா் பாதுகாப்புக் குழுவின் செயலாளா் ராஜசுப்ரமணியன் கூறியதாவது: கொடுமுடியில் உள்ள அரசுப் போக்குவரத்து கழக பணிமனையை தரம் உயா்த்த வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாகத் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பணிமனை மேம்படுத்தப்படாததால் மிகவும் மோசமான நிலையில் உள்ள பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நிலையில் பயணிகள் உள்ளனா்.
கொடுமுடியிலிருந்து சேலம், குன்னத்தூா், உடுமலை, மதுரை உள்ளிட்ட பல்வேறு புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். மேலும் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். மற்ற பணிமனைகளில் இருந்து கொடுமுடி பணிமனைக்கு பேருந்துகளை மாற்ற வேண்டும் என்றாா்.