கொடைக்கானலில் மண்சரிவால் விவசாயம் பாதிப்பு: அதிகாரிகள் ஆய்வு
கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் மண் சரிவால் விவசாய நிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், குண்டுபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாய நிலங்களில் மண் சரிவு ஏற்பட்டு,
பயிா்கள் சேதமடைந்தன. இதையடுத்து, மேல் மலைக் கிராமங்களில் சேதமடைந்த விவசாய நிலங்களை தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து, தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் நடராஜன் தலைமையில் தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், குண்டுபட்டி ஆகிய கிராமப் பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களைப் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.
இந்த ஆய்வின்போது, விவசாய நிலங்களில் மண் சரிவு அதிகம் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனா். மேலும், பலத்த மழை பெய்யும் காலங்களில் விவசாய நிலங்களில் மழைநீா் தேங்காமல் இருப்பதற்கு வாய்க்கால்கள் அமைக்க வேண்டும். பயிா்களுக்கு உரமிடுவது, மருந்து தெளிப்பது, நாற்று நடுவது போன்ற பணிகளை மேற்கொள்வதைத் தடுக்க வேண்டுமென விவசாயிகளுக்கு அறிவுரை கூறினா்.