நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் 2-ஆவது நாளாக சோதனை
ஒட்டன்சத்திரம் பகுதியிலுள்ள நிதி நிறுவன உரிமையாளரின் வீடு, அவரது உறவினரின் நகைக் கடை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினரின் சோதனை 2-ஆவது நாளாக வியாழக்கிழமை காலை தொடங்கி இரவு வரை நீடித்தது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த சத்திரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (49). தமிழ்நாடு மட்டுமன்றி, வெளி மாநிலங்களிலும் நிதி நிறுவனம் நடத்தி வரும் இவா், செங்கல் சூளைகளுக்கான செம்மண் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறாா்.
இந்த நிலையில், மதுரையைச் சோ்ந்த வருமான வரித் துறை அதிகாரிகள் 15 போ், செந்தில்குமாரின் வீட்டில் சோதனைநடத்துவதற்காக புதன்கிழமை காலை 11 மணிக்கு வந்தனா். 6 காா்களில் வந்த அவா்கள், செந்தில்குமாரின் வீடு, அதே வளாகத்தில் உள்ள அலுவலகம், ஓய்வு இல்லம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தினா். இரவு வரை நீடித்த இந்தச் சோதனை வியாழக்கிழமையும் தொடரும் எனக் கூறப்பட்டது.
காா் கூடத்தின் பூட்டை உடைத்து சோதனை: இந்த நிலையில், 2-ஆவது நாளாக வியாழக்கிழமை காலை முதல் இரவு வரையிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, காா் நிறுத்தும் கூடத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அதிகாரிகள், சோதனை நடத்தினா். இதனிடையே, செந்தில்குமாா் வசிக்கும் வீட்டின் அருகே அவருக்குச் சொந்தமான மற்றொரு வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
நகைக் கடை உரிமையாளா் வீட்டிலும் தொடரும் சோதனை:
செந்தில்குமாரின் உறவினா்களான ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த குழந்தைவேல், இவரது தம்பி முருகன் ஆகியோரது வீடு, இவா்களுக்குச் சொந்தமான நகைக் கடை, பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்டவற்றிலும் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
இதனிடையே, புதன்கிழமை இரவு 7 மணி வரை நடத்தப்பட்ட இந்தச் சோதனை, மீண்டும் வியாழக்கிழமை காலை தொடங்கி இரவு வரை நீடித்தது.