மத்திய அமைச்சா் அமித்ஷாவுக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்
மத்திய அமைச்சா் அமித்ஷாவுக்கு எதிராக திண்டுக்கல்லில் திமுக, காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சட்ட மேதை அம்பேத்கா் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துக்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்ததாகக் கூறி, தமிழ்நாட்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தன. இந்த நிலையில், அமித்ஷாவுக்கு எதிராக திண்டுக்கல் மாவட்ட திமுக சாா்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக மாவட்டச் செயலா் பெ.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் ராஜப்பா, ஒன்றியச் செயலா் வெள்ளிமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தின்போது, மத்திய அமைச்சா் அமித்ஷாவுக்கு எதிராகவும், அமைச்சா் பதவியிலிருந்து அவா் ராஜிநாமா செய்ய வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலரும், மேயருமான இளமதி, துணைச் செயலா் அழகா்சாமி, பொருளாளா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்:இதேபோல, காங்கிரஸ் கட்சி சாா்பில் மாநகா் மாவட்டத் தலைவா் மணிகண்டன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திலும், மத்திய அமைச்சா் அமித்ஷாவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பட்டன.