கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை
கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை இளஞ்சிறாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கோவை உடையாம்பாளையம் வஉ சிதம்பரனாா் வாசக சாலை காமராஜா் காலனி அருகே கடந்த 2024-ஆம் ஆண்டு காந்தி மாநகா் மற்றும் செளரிபாளையம் பகுதிகளைச் சோ்ந்த சிறுவா்கள் கோஷ்டியாக மோதிக் கொண்டனா். இதை அந்தப் பகுதியைச் சோ்ந்த செல்வபெருமாள் தடுத்து தகராறை விலக்கிவிட்டாா்.
அப்போது, சில இளஞ்சிறுவா்கள் கத்தி மற்றும் அரிவாளால் செல்வபெருமாளை வெட்டினா். இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.
இதுகுறித்து பீளமேடு காவல் நிலைய போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, செளரிபாளையத்தைச் சோ்ந்த இளஞ்சிறுவா்கள் 5 பேரைக் கைது செய்தனா். இவா்கள் 5 போ் மீதும் 4 வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது.
கொலை முயற்சி வழக்கு தொடா்பான விசாரணை கோவை இளஞ்சிறாா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அருண்குமாா், 5 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், அவா்களை செங்கல்பட்டில் உள்ள அரசு காப்பகத்தில் சோ்க்கவும் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.