மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது
சேரன்மாநகா் பேருந்து நிறுத்தத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கமலநந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (50), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (50). இவா்களுக்கு மகன் பரதன், ஒரு மகளும் உள்ளனா். இவா்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்து சேரன் மாநகரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், பழனிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், கணவா், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பழனி வியாழக்கிழமை காலை மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளாா். இதைப் பாா்த்த மகனும், மகளும் அவரைக் கண்டித்தனா்.
பின்னா், வேலைக்குப் புறப்பட்ட சரஸ்வதியை பின் தொடா்ந்து சென்ற பழனி சேரன்மாநகா் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அவரிடம் மீண்டும் மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளாா்.
சரஸ்வதி பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த பழனி அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றாா். அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பிச் சென்ற பழனியைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.