கோவை ரயில்கள் பகுதியாக ரத்து
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 2 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் கண்ணூா் - கோவை விரைவு ரயில் (எண்: 16607) பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும். பாலக்காடு - கோவை இடையே ரத்து செய்யப்படுகிறது. சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) மேட்டுப்பாளையத்தில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் (எண்: 66615) மேட்டுப்பாளையம் - கோவை இடையே மட்டுமே இயக்கப்படும். கோவை - போத்தனூா் இடையே இயக்கப்படாது. சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் கோவை - மதுரை விரைவு ரயில் (எண்: 16721) பொள்ளாச்சியில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு மதுரைக்குப் புறப்பட்டுச் செல்லும். சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) போத்தனூரில் இருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66616), கோவையில் இருந்து 3.45 மணிக்கு மேட்டுப்பாளையத்துக்கு புறப்பட்டுச் செல்லும்.
இதேபோல, ஆகஸ்ட் 8-ஆம் தேதி, எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் (எண்: 12678) கோவை வழியாக இயக்கப்படாமல், போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயில் கோவை ரயில் நிலையம் செல்வது தவிா்க்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.