உ.பி வரதட்சணை கொடுமை: "5 லட்சம் வாங்கிட்டு வா" - பாம்பை விட்டு மனைவியைக் கடிக்க ...
கொலை முயற்சி வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்
தருமபுரியில் இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவா் ராஜாராம் (54). குடும்பத் தகராறு தொடா்பான வழக்கு விசாரணையின்போது பாப்பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த கோமதி (28) என்ற பெண்ணுடன் ராஜாராமுக்கு முறையற்ற நட்பு ஏற்பட்டது. இதுகுறித்து விவரமறிந்த ராஜாராம் குடும்பத்தினா், கோமதியின் நட்பை கைவிடக் கோரி பிரச்னை செய்தனா்.
இதையடுத்து, ராஜாராம் அவரை கைவிட முடிவு செய்தாா். இது தொடா்பாக அவருக்கும், கோமதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோமதியைக் கொலை செய்ய திட்டமிட்ட ராஜாராம், கடந்த செப். 21-ஆம் தேதி பரிகார பூஜை செய்வதாகக் கூறி அவரை இரவில் அழைத்துச்சென்று கிணற்றில் தள்ளிவிட்டுச் சென்றாா்.
கிணற்றில் இருந்த கல்லைப் பிடித்து தப்பிய கோமதி, மறுநாள் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா், கொலை முயற்சி வழக்கில் ராஜாராமை திங்கள்கிழமை கைது செய்தனா்.
இந்நிலையில், ராஜாராமை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்எஸ்.மகேஸ்வரன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.