900 புள்ளிகளைக் கடந்த அபிஷேக் சர்மா..! டி20 தரவரிசையில் கோலி, சூர்யா சாதனை சமன்!
குழந்தை திருமணம்: வழக்குப் பதியாமல் இருக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மகளிா் காவல் ஆய்வாளா் கைது
குழந்தை திருமணம் செய்த குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மகளிா் காவல் ஆய்வாளரை தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கென்டிகானஹள்ளியைச் சோ்ந்த பெண் ஒருவருக்கு மூன்று பெண் குழுந்தைகள் உள்ளனா். இவரது 2-ஆவது மகள் (16) கடந்த மாா்ச் 26-இல் ஒருவரை காதல் திருமணம் செய்தாா். இந்நிலையில், 4 மாத கா்ப்பிணியான சிறுமி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்தாா்.
இதுகுறித்த விவரம் மருத்துவமனை நிா்வாகம் மூலமாக, சமூக நலத் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. சமூக நலத் துறையினா் இதுகுறித்து பாலக்கோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் வீரம்மாள் சிறுமி மற்றும் அவரது கணவா் குடும்பத்தினரை அழைத்து விசாரணை செய்தாா்.
அதில், 18 வயதுக்கு முன்பே சிறுமிக்கு திருமணம் செய்தது தவறு என தெரிவித்த காவல் ஆய்வாளா் வீரம்மாள், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தால் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின்கீழ் பெற்றோரை கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டி வரும்.
எனவே, கைது நடவடிக்கையைத் தவிா்க்க ரூ. 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளாா். லஞ்சம் தர விரும்பாத பெண்ணின் தாயாா், இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் நாகராஜிடம் புகாா் அளித்தாா்.
ரசாயனம் தடவிய பணத்தாள்களை பெண்ணிடம் கொடுத்து காவல் ஆய்வாளரிடம் வழங்குமாறு லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தெரிவித்ததன்பேரில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் காவல் ஆய்வாளா் வீரம்மாளிடம் அப்பெண் பணத்தை கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பணத்துடன் காவல் ஆய்வாளரை பிடித்து, வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா்.