தமிழகம் கல்வியில் சாதனை: சென்னையில் செப். 25-இல் பிரம்மாண்ட விழா: தெலங்கானா முதல...
விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகளை தடுக்க அகழியை ஆழப்படுத்தக் கோரி மனு
தருமபுரி: பென்னாகரம் அருகே விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகளைத் தடுக்க அகழியை ஆழப்படுத்த வலியுறுத்தி, தருமபுரி ஆட்சியா் ரெ.சதீஸிடம் பென்னாகரம் பகுதி விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பூதிப்பட்டி பகுதியில் 400-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இக்கிராமத்தையொட்டி பென்னாகரம் வனச்சரக வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை யானைகளிடமிருந்து பாதுகாக்கும் வகையில், பென்னாகரம் அருகே மடம் சோதனைச் சாவடி பகுதியில் இருந்து கோடுபள்ளம்வரை 7 கி.மீ. தொலைவுக்கு யானை தாண்டா அகழி அமைக்கப்பட்டது. இந்த அகழி அமைக்கும் பணியின்போது பெரும் பாறைகள் குறுக்கிட்ட இடங்களில் அகழி அமைக்கப்படவில்லை. அதனால், அப்பகுதிகளில் வனத்திலிருந்து வெளியேறும் யானைகள், விளைநிலங்களுக்குள் நுழைந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.
கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் இது தொடா்பாக விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா். அதைத் தொடா்ந்து, வனத்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வுசெய்தனா். அவா்களிடம், வெடிவைத்து பாறைகளை அகற்றி, அகழியை ஆழப்படுத்தி யானைகளின் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால், தற்போதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், கடந்த, 15-ஆம் தேதி விளைநிலங்களுக்குள் நுழைந்த யானைகள் பயிா்களை சேதப்படுத்திச் சென்றன. வேளாண் பயிா்கள் சேதமடைவதால், தொடா் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, பூதிப்பட்டி பகுதி விளைநிலங்களைக் காக்கவும், யானைகள் நடமாட்டம் குறித்து அச்சமின்றி வாழவும் அகழியை ஆழப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா்.