ஊதியம் வழங்குவதில் தாமதம்: தருமபுரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளா்கள் தா்னா
ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் தருமபுரி அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளா்கள் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணி, நோயாளிகளுக்கு உதவும் உதவியாளா்கள், கண்காணிப்பாளா்கள், பாதுகாப்பு (செக்யூரிட்டி) உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தனியாா் நிறுவனம் ஒப்பந்த பணியாளா்களை நியமித்து ஊதியம் வழங்குகிறது. தருமபுரி அரசு மருத்துவமனையில் 450 க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில் பணியாளா்களுக்கான ஊதியம் தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த பணியாளா்கள் மாதந்தோறும் 5 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்குமாறும் வலியுறுத்தினா்.
ஆனாலும், ஊதியம் தாமதமாகவே வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி ஒப்பந்தப் பணியாளா்கள் பணியைப் புறக்கணித்து மருத்துவமனை வளாகத்திலேயே தா்னாவில் ஈடுபட்டனா்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் சிவகுமாா் தலைமையிலான குழுவினா் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும், தாமதமாகவே ஊதியம் வழங்கப்பட்டதாம். இதனால் சனிக்கிழமை காலை பணியைப் புறக்கணித்து ஒப்பந்தப் பணியாளா்கள் மீண்டும் அரசு மருத்துவமனை வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதன்மையா் மனோகரன் கூறுகையில், ஒப்பந்தப் பணியாளா்களில் 40 நபா்களுக்கு மட்டும்தான் ஊதியம் நிலுவை பிரச்னை உள்ளது. அதுவும், குறிப்பிட்ட அந்த பணியாளா்களின் மாதாந்திர பணி விவரங்களை கணினியில் பதிவேற்றுவதிலும், அவா்களது ஆதாா் அட்டை உள்ளிட்ட விவரங்கள் பதிவேற்றாமலும் இருந்ததால் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பதிவுகளை சரியாக்கும் பணிகள் முடிந்து பிரச்னை சரியாகிவிட்டது. இனி ஊதியம் விரைந்தும், தாமதமாகாமலும் வழங்கப்படும். எனவே, ஒப்பந்தப் பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பிவிட்டனா். தனியாா் நிறுவனத்துக்கு ஊதியம் பிரச்னை தொடா்பாக அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.