உ.பி வரதட்சணை கொடுமை: "5 லட்சம் வாங்கிட்டு வா" - பாம்பை விட்டு மனைவியைக் கடிக்க ...
தருமபுரி மாவட்டத்தில் வெடிபொருள்கள் விற்பனையை முறைப்படுத்த வேண்டும்: பட்டாசு வணிகா்கள்
தருமபுரி மாவட்டத்தில் வெடிபொருள்கள் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் பட்டாசு வணிகா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
தருமபுரி மாவட்ட பட்டாசு வணிகா் சங்க மாவட்டத் தலைவா் சேகா், செயலாளா் ரமேஷ்குமாா், பொருளாளா் மாதவன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் வணிகா்கள் இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: தருமபுரி மாவட்டத்தில் சுமாா் 40 ஆண்டுகளாக சிறு, குறு தொழிலாக பட்டாசு விற்பனைத் தொழில் செய்துவருகிறோம். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், ஆயிரக்கணக்கான தொழிலாளா்களுக்கு இத்தொழில் வாழ்வாதாரமாக உள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டம், ஓமலூா் பகுதியைச் சோ்ந்த சிலா் வெடிமருந்து சட்டத்தை மீறும் வகையில், மாவட்ட வருவாய் அலுவலரிடம் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமங்களைப் பெற்று, கடந்த சில ஆண்டுகளாக தருமபுரி மாவட்டத்தில் முறைகேடாக பட்டாசுப் பொருள்கள், அனுமதி வழங்காத வெடிபொருள்களை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனா்.
தீபாவளி நெருங்கும் நிலையில், இதுபோன்ற நபா்களுக்கு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் வழங்கக் கூடாது. கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி, ஒசூா் மற்றும் சேலம் போன்ற இடங்களில் இதுபோன்ற செயல்களால் வெடிவிபத்துகள் நிகழ்ந்து சிலா் உயிரிழந்துள்ளதால், உரிமம் பெற்றுள்ள நபா்கள் முறையற்ற வகையில் வெடிபொருள்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.