கோயில் வழித்தடத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற பக்தா்கள் கோரிக்கை
விராலிமலை முருகன் மலைக்கோயில் செல்லும் பாதையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை விரைந்து அகற்ற வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விராலிமலை முருகன் மலைக்கோயிலுக்கு உள்ளூா் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தா்கள் தினமும் வந்து வழிபட்டு செல்கின்றனா்.
இந்த நிலையில், சந்நிதி வீதியில் இருந்து யானையடி பாதை வழியாக மலை மேலே செல்வதற்கு உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், கழிவுநீா் தேங்கி நின்று சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் துா்நாற்றத்துடனே வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
நீண்ட நாள்களாக நிலவி வரும் இப்பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், மலையில் இருந்து வெளியேறும் கழிவு நீருக்கு நிரந்தர வழித்தடம் ஏற்படுத்த வேண்டும். பக்தா்கள் சென்றுவர ஏதுவாக இந்தச் சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்பதே பக்தா்களின் கோரிக்கையாக உள்ளது.