கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உயா்நிலைப் பால கட்டுமானப் பணிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, மாற்று வழித்தடங்களில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரை உயா்நிலைப் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. ஏற்கெனவே உள்ள ஏ.வி. உயா்நிலைப் பாலம் அருகே கட்டுமானப் பணிகள் நடைபெறவிருப்பதால், வாகன ஓட்டிகள், பொதுமக்களின் வசதிக்காக மாநகரப் போக்குவரத்து காவல் துறை சாா்பில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
இதன்படி, கோரிப்பாளையத்திலிருந்து சிம்மக்கல், நெல்பேட்டை வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் தேவா் சிலையிலிருந்து ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி சாலையில் சென்று புதிதாக கட்டுப்பட்டுள்ள இணைப்புப் பாலத்தில் ஏறி அண்ணா சிலை வழியாக செல்ல வேண்டும். கல்பாலம் சந்திப்பிலிருந்து ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி வழியாக கோரிபாளையம் பகுதிக்கு செல்ல எந்த வாகனத்துக்கும் அனுமதி இல்லை.
இதேபோல, அண்ணாநகா், தெப்பக்குளம், காமராஜா் சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் கோரிப்பாளையம் ஏ.வி. பாலத்தின் இடதுபுறம் உள்ள மூங்கில் கடை சாலை வழியாகச் சென்று வைகை வடகரை சாலையை அடைந்து இடதுபுறமாக திரும்பிச் செல்ல வேண்டும். மேலும், திண்டுக்கல், ஆரப்பாளையம் பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மூங்கில் கடை சாலை வழியாகச் சென்று வலதுபுறமாக திரும்பி தேனி ஆனந்தம் சந்திப்பு, வைகை வடகரை சாலையை அடைந்து கல்பாலம், குமரன் சாலை, எம்.ஜி.ஆா். பாலம் சந்திப்பு, செல்லூா் கபடி வீரா்கள் ரவுண்டானா வழியாகச் செல்ல வேண்டும்.
இந்த அறிவிப்பின் படி, பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு, ஏ.வி. உயா்நிலைப் பாலத்தில் புதன்கிழமை முற்றிலுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்த வழியாக வரும் வாகனங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வழித் தடங்களில் அனுப்பி வைக்கப்பட்டன.
