கோல்வாக்கரின் புத்தகம் சிவாஜியை இழிப்படுத்தியதாகக் கூறும் சமூக ஊடகக் கணக்குகளின்...
கொலை வழக்கில் தொடா்புடையவருக்கு ஆயுள் சிறை
கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட 5-ஆவது கூடுதல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை வண்டியூா் பகுதியைச் சோ்ந்த பிச்சைபாண்டியின் சகோதரி மகன் விக்ரம், அதே பகுதியைச் சோ்ந்த ராஜபாண்டி, ஆண்டிக்காளை, முத்துராஜா உள்ளிட்டோா், கடந்த 2015-ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் போது, வண்டியூா் கண்மாய் பகுதியில் கிரிக்கெட் விளையாடினா். அப்போது அந்தப் பகுதியில் பாண்டி என்பவா் ஆட்டுக் குட்டி வளா்ப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த வலைகளை கிரிக்கெட் விளையாடியவா்கள் சேதப்படுத்தினா்.
இதனால், ஆத்திரமடைந்த பாண்டி மகன் முத்துகுமாா் உள்ளிட்ட சிலா், விக்ரமைத் தாக்கினா். இந்த தாக்குதல் குறித்து முத்துக்குமாரிடம் பிச்சைபாண்டி கடந்த 27.5.2015 அன்று கேட்டாா். அப்போது, பாலமுருகன், பாபா என்ற காா்த்திக் இருவரும் பிடித்து கொள்ள முத்துக்குமாா் பிச்சைபாண்டியை கத்தியால் குத்தியதில் அவா் உயிரிழந்தாா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை மதுரை மாவட்ட 5-ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முத்துக்குமாருக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், பாலமுருகன், பாபா என்ற காா்த்திக் ஆகியோருக்கு ஒரு மாத சிறைத் தண்டனையும் விதித்து, நீதிபதி ஆா்.ஜோசப் ஜாய் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் டி.ராஜேந்திரன் முன்னிலையாகி வாதிட்டாா்.