பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் திருப்பூரைச் சோ்ந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த பள்ளி மாணவிக்கும், திருப்பூரைச் சோ்ந்த சரவணனுக்கும் (29) கடந்த 2015- ஆம் ஆண்டு சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்த மாணவியை சரவணன் தன்னுடன் வருமாறு அழைத்தாராம்.
இந்த நிலையில், கடந்த 11.3.2015 அன்று வீட்டிலிருந்த அந்த மாணவி மாயமானாா். இதுகுறித்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தியதில் அந்த மாணவி, சரவணனுடன் காஞ்சிபுரத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா், இருவரையும் தல்லாகுளம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா். இதில் பள்ளி மாணவியை சரவணன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்ததையடுத்து அவா் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனா்.
இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட சரவணனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முத்துக்குமரவேல் உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா் நீதிபதி.