2 மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்: உயா்நீதிமன்றம் அதிருப்தி
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையான நிலையில், கடந்த 2 மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை அதிருப்தி தெரிவித்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் துணை ஆட்சியராகப் பணியாற்றிய செல்வநாயகம், பணி ஓய்வு பெற வேண்டிய நாளில் உரிய காரணங்கள் இன்றி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதை ரத்து செய்து, தனக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியம், பணப் பலன்களை வழங்க வேண்டும் என அவா் மனு தாக்கல் செய்தாா்.
இதேபோல, திருநெல்வேலியைச் சோ்ந்த முருகேஷ் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத வருவாய்த் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக வருவாய்த் துறை முதன்மைச் செயலா் அமுதா நீதிமன்றத்தில் முன்னிலையானாா்.
அரசுத் தரப்பில், இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட வருவாய் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த 2 மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. நீதிமன்றம் உத்தரவிட்டால், அதை நிறைவேற்ற முதன்மைச் செயலா்கள், மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட வருவாய் அலுவலா்கள், வருவாய்க் கோட்டாட்சியா்கள், வட்டாட்சியா்கள் 3 ஆண்டுகள் வரை காலம் தாழ்த்துகின்றனா். அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என்பதை கொள்கையாக வைத்துள்ளனரா?.
கல்வித் துறையில் அதிகளவு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. கடந்த 2023-ஆம் ஆண்டு தமிழக முன்னாள் தலைமைச் செயலா் சிவதாஸ் மீனா, நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டாா். அவரது உத்தரவை எத்தனை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தியுள்ளனா். அப்படியெனில், முன்னாள் தலைமைச் செயலரின் உத்தரவு தேவையற்ா?. இந்த வழக்கு விசாரணை ஏப். 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.