கோல்வாக்கரின் புத்தகம் சிவாஜியை இழிப்படுத்தியதாகக் கூறும் சமூக ஊடகக் கணக்குகளின்...
பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கு: விசாரணை ஆவணங்களை நீதிமன்றத்தில் சமா்ப்பித்தது சிபிஐ
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் காவல் துறை அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கில், விசாரணை அறிக்கையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சிபிஐ செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது.
ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த மனு: சிலை கடத்தலில் ஈடுபட்டவா்களுடன் எனக்குத் தொடா்பு இருப்பதாகக் கூறி, ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் காதா் பாட்ஷா சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், என் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதன்படி சிபிஐ வழக்குப் பதிந்து விசாரணையும் மேற்கொண்டது.
இதுதொ டா்பாக மதுரை மாவட்டக் கூடுதல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த முதல் கட்ட விசாரணை அறிக்கையின் நகலை வழங்கக் கோரி விசாரணை மன்றத்தில் மனு தாக்கல் செய்தேன்.
அதற்கு முதல் தகவல் அறிக்கையைத் தவிர, பிற ஆவணங்களை வழங்க இயலாது எனக் கூறி மனுவை திருப்பி அனுப்பிவிட்டனா். எனவே, எனக்கு விசாரணை அறிக்கையின் நகலை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் கே.சீனிவாசன் முன்வைத்த வாதம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டில் முகாந்திரந்திரம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் சுபாஷ் சந்திர போஸ் என்பவரை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டதாலேயே மனுதாரா் மீது வழக்குப் பதியப்பட்டது. மனுதாரா் முன்பிணை நிபந்தனைகளை மீறி சாட்சிகளை மிரட்டி வருவதும் தெரியவந்தது.
எனவே, பொன் மாணிக்கவேலுக்கு வழங்கப்பட்ட முன்பிணையை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை சிபிஐ தொடங்கியுள்ளது. மனுதாரா் கேட்கக் கூடிய விசாரணை அறிக்கை நகலை வழங்க இயலாது. இதனால், இந்த வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என்றாா் அவா்.
இதற்கு நீதிபதி, உயா்நீதிமன்றத்தால் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டவா் மீது எதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்தீா்கள் எனக் கேள்வி எழுப்பினாா்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை தொடா்பான ஆவணங்கள் சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டன. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.