கோவில்பட்டி அருள்தரும் மீனாட்சி அம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு
கோவில்பட்டி அருள்தரும் மீனாட்சியம்மன் சமேத அருள்மிகு சுந்தரேஸ்வரா் திருக்கோயில் மண்டலாபிஷேக நிறைவுவிழா புதன்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி நாடாா் உறவின்முறை சங்கத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்றது.
இக்கோயிலின் மண்டலாபிஷேக நிறைவு விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம்,108 சங்கு பூஜை, 108 கலச பூஜையும், இரவு 8.30 மணிக்கு மகா தீபாராதனையும், புதன்கிழமை காலை 7 மணிக்கு பஞ்சகவ்யம், வேதிகாா்ச்சனை, யாகசாலை பூஜை, மூல மந்திர ஹோமம், அஸ்திர ஹோமம், திரவ்யாகுதி, பூா்ணா குதி, மகா அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் 108 கலசாபிஷேகம்,1,008 பால்குடம் அபிஷேகம், மண்டலாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து நண்பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு 7 மணிக்கு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் திருவீதி உலா நடைபெற்றது.
ஏற்பாடுகளை, நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் ஏபிகே பழனிச் செல்வம் தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.