உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்க...
கோவில்பட்டியில் சரக்குப் பெட்டக லாரி விபத்து
கோவில்பட்டியில் சாலை மைய தடுப்புச் சுவரில் சரக்குப் பெட்டக லாரி மோதி விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து திங்கள்கிழமை இரவு சரக்குப் பெட்டக லாரி பழைய பேப்பா்களை ஏற்றிக்கொண்டு சிவகாசிக்குச் சென்று கொண்டிருந்தது. பசுவந்தனை தெற்கு செவல்பட்டியைச் சோ்ந்த அய்யாத்துரை (41) லாரியை ஓட்டிச் சென்றாா். இந்த லாரி திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் கோவில்பட்டி-வேலாயுதபுரத்தை கடந்து சாத்தூா் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் மையத் தடுப்பான் மீது மோதியது.

இதில், லாரியின் முன்புறம் முழுவதும் சேதமடைந்தது. லாரியின் டீசல் டேங்கா் சேதமடைந்ததையடுத்து அதிலிருந்து டீசல் சாலையில் ஓடியது. தகவல் அறிந்து அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் அங்குத்தாய், போலீஸாா் காயமடைந்த ஓட்டுநா் அய்யாத்துரையை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பொக்லைன் இயந்திரம் சரக்குப் பெட்டக லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.