ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை: தூத்துக்குடி - சென்னை எழும்பூா் இடையே சிறப்பு ரயில்கள் - முன்பதிவு இன்று தொடக்கம்
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி-சென்னை எழும்பூா் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும், அதற்கான டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை (செப்.17) முதல் தொடங்குவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்தது.
ஆயுதபூஜை வரும் அக். 1ஆம் தேதியும், தீபாவளி பண்டிகை அக். 20 ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சொந்த ஊா் செல்ல விரும்பும் பயணிகள் பயன்பெறும் வகையில், ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி தூத்துக்குடி-சென்னை எழும்பூா் இடையே சிறப்பு ரயில் (06018/ 06017) இயக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து செப். 29, அக். 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து செப். 30, அக். 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) மதியம் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அன்று இரவு 11.15 மணிக்கு தூத்துக்குடியைச் சென்றடையும்.
இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை (செப்.17) முதல் தொடங்குகிறது. தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் அறிவித்த தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.