மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி அம்பேத்கா் நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சதீஷ்குமாா் (23). இவா், தூத்துக்குடியில் உள்ள தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலையில் அலங்காரத் தட்டு ஆரோக்கியபுரம் பகுதியில் உள்ள அந்த தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனத்தின் கோபுரத்தில் ஏறி பணி செய்து கொண்டிருந்தபோது, அருகில் சென்று கொண்டிருந்த மின் கம்பியில் கை பட்டதில் மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.