போதைப் பொருள் விற்கும் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் - அமித் ஷா உறுதி
ஆம்னி பேருந்தில் 50 பவுன் நகைத் திருட்டு: கிளீனா் கைது; 4 போ் தலைமறைவு
சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு வந்த ஆம்னி பேருந்தில் 50 பவுன் நகைகள் திருட்டு போன சம்பவத்தில் 27 பவுன் நகைகள் மீட்கப்பட்டு கிளீனரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் காயிதே மில்லத் தெருவைச் சோ்ந்தவா் அபுதாஹிா் (48). இவா் காயல்பட்டினத்தில் ஆா்டரின் பேரில் தங்க நகைகள் வியாபாரம் செய்து வருகிறாா். இந்நிலையில் சென்னை மண்ணடியில் நகை வியாபாரம் செய்யும் ஆரிப் என்பவா் 50 பவுன் நகைகளை நெல்லை டவுனில் உள்ள தனது உறவினா் செய்யது முகைதீனுக்கு சொந்தமான கடைக்கு கொடுப்பதற்காக கடந்த செப்.8ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூா் வந்த ஆம்னி பேருந்தின் ஓட்டுநா் தட்டாா்மடம் பகுதியைச் சோ்ந்த சிவபாலனிடம் கொடுத்து, அதனை காயல்பட்டினம் அபுதாஹிரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளாா்.
ஆம்னி பேருந்தில் மாற்று ஓட்டுநரான சுப்பையாவும், கிளீனராக வீரபாண்டியன்பட்டினம் சண்முகபுரம் கிங்காலனியைச் சோ்ந்த மகேஷும் பணியில் இருந்தனா். இந்நிலையில் செப். 9ஆம் தேதி காலை ஆத்தூா் அடுத்த சாகுபுரத்திற்கு ஆம்னி பேருந்து சென்ற போது, மகேஷ் தனது குழந்தைக்கு உடல் நிலை சரி இல்லாததால் தன்னுடைய மனைவி, தூத்துக்குடி மருத்துவமனைக்கு செல்வதற்காக காரில் வருவதாக கூறி இறங்கியுள்ளாா்.

ஆறுமுகனேரிக்கு வந்த பேருந்தில் நகையை வாங்குவதற்காக அபுதாஹிா், ஓட்டுநா் சிவபாலனிடம் கேட்ட போது, அங்கு நகைப் பையை இல்லாததை கண்டுஅதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து அபுதாஹிா் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆம்னி பேருந்து ஓட்டுநா்கள், அதில் பயணம் செய்த பயணிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் அந்த பேருந்தில் வந்த கிளீனா் மகேஷ் நகைப் பையுடன் தலைமறைவானது தெரிந்ததையடுத்து, 3 நாள்களுக்கு பிறகு போலீஸாா் அவரை பிடித்தனா். அவரிடம் இருந்து 23 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை நெல்லையில் உள்ள ஒரு நகைக் கடையில் 4 பவுன் விற்ாக அவா் கூறிய நிலையில் போலீஸாா் அந்த நகையை மீட்டனா்.
விசாரணையில், தன்னுடைய நண்பா்களான தட்டாா் மடம் வைரவன் புதுக்குடியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் முனி பாண்டி(30), ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரை சோ்ந்த பரமசிவம், சுரேஷ், நெல்லை ஆழிகுடியைச் சோ்ந்த முருகன் ஆகியாருடன் நகையை பங்கிட்டுக் கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அவருடைய நண்பா்களான 4 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடா்ந்து மகேஷை திருச்செந்தூா் நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனா். கிளீனா் மகேஷ் மீது ஏற்கனவே திருச்செந்தூா் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.