கோவை: குண்டும் குழியுமான சாலைகளால் விபத்து அபாயம்
கோவை மாநகரில் குண்டும் குழியுமான சாலைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் மேயா் கா.ரங்கநாயகி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், மக்கள் நீதி மய்யத்தின் 87-ஆவது வாா்டு செயலாளா் ஜலீல் அளித்த மனுவில் கூறியிருப்பது: 87-ஆவது வாா்டுக்குள்பட்ட திருவள்ளுவா் நகரில் 5 அடி சாலையால் நான்கு சக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இந்தச் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்கடம் வின்சென்ட் சாலை கிரீன் காா்டன் நண்பா்கள் குழுவினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 82-ஆவது வாா்டுக்குள்பட்ட வின்சென்ட் சாலை, ஹவுஸிங் யூனிட் பகுதிகளில் கழிவுநீா் கால்வாய் தூா்வாரப்படாததால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுநீா் கால்வாயை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் என்.சுபாஷ் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மாநகரில் சூயஸ் குடிநீா் இணைப்பு, புதை சாக்கடை திட்டத்துக்காகத் தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. எனவே, இந்தச் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மாநகரில் தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் மாநகரச் செயலாளா் ஏ.செளந்தரராஜன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 84-ஆவது வாா்டுக்குள்பட்ட தியாகி சிவராம் நகரில் கழிவுகள் அகற்றப்படாததால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், முறையான கழிவுநீா்க் கட்டமைப்பு இல்லாததால் மழைக் காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வெளியேறுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 46 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மேயா் கா.ரங்கநாயகி உத்தரவிட்டாா்.
இந்தக் கூட்டத்தில் துணை ஆணையா் க.சிவகுமாா், நகரமைப்பு அலுவலா் குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.