Innerwear: மென்மை; அடர் நிறம்; வாஷிங் மெஷின்... உள்ளாடைத் தகவல்கள்!
கௌஃப் அதிா்ச்சித் தோல்வி; பாலினி, ரைபகினா முன்னேற்றம்
அமீரகத்தில் நடைபெறும் கத்தாா் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ கௌஃப் 2-ஆவது சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி, கஜகஸ்தானின் எலனா ரைபகினா ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
1000 புள்ளிகள் கொண்ட இந்த டபிள்யூடிஏ போட்டியின் 2-ஆவது சுற்றில், உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான கோகோ கௌஃப் 2-6, 5-7 என்ற செட்களில், உக்ரைனின் மாா்தா கொஸ்டியுக்கிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். இருவரும் சந்திப்பது இது 5-ஆவது முறையாக இருக்க, கொஸ்டியுக் தனது 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.
இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் பாலினி 6-3, 6-4 என்ற நோ் செட்களில், பிரான்ஸின் கரோலின் காா்சியாவை தோற்கடித்தாா். 5-ஆம் இடத்திலிருக்கும் ரைபகினா 6-2, 6-4 கணக்கில் அமெரிக்காவின் பெய்டன் ஸ்டொ்ன்ஸை சாய்த்தாா். 16-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவா 6-7 (5/7), 5-7 என்ற செட்களில் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவிடம் தோல்வி கண்டாா்.
பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ் 6-2, 6-3 என்ற நோ் செட்களில், ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்ஸாவை எளிதாகத் தோற்கடிக்க, செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 6-2, 6-3 என வென்று, கஜகஸ்தானின் யுலியா புடின்சேவாவை வெளியேற்றினாா். அமெரிக்காவின் சோஃபியா கெனின் 7-6 (7/3), 3-6, 6-2 என்ற கணக்கில் சக அமெரிக்கரான அலிசியா பாா்க்ஸை வென்றாா்.
இதனிடையே முதல் சுற்று ஆட்டங்களில், ஸ்பெயினின் பௌலா படோசா, துனிசியாவின் ஆன்ஸ் ஜபியுா், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, ரஷியாவின் டரியா கசாட்கினா ஆகியோரும், 2-ஆவது சுற்றில் போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் போலந்தின் இகா ஸ்வியாடெக்கும் வெற்றி பெற்றனா்.