ஆருத்ரா தரிசனம்: ஜன.13ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
'சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு `மைக்’ மேனியா’ - சி.விஜயபாஸ்கர் காட்டம்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவல்துறையினரின் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உட்பட 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், கைது செய்து அவர்களை திருவப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அப்போது, அந்த திருமண மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர்,
``அண்ணா பல்கலைக்கழகம் என்பது இந்தியாவிலேயே முதன்மையான பல்கலைக்கழகம். இங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பாதுகாப்பு அதிகம் என்பதால் தான் அதிக அளவு மாணவ, மாணவிகள் படிப்பதற்காக நம்பிக்கையோடு சேருகின்றனர். ஆனால், இன்று அந்த நம்பிக்கைக்கு ஒரு கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகளுக்கு மட்டுமல்லாமல் அவருடைய பெற்றோர்களுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு இன்று நடந்துள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசும், தி.மு.க-வும் பொறுப்பேற்க வேண்டும். தி.மு.க-வைச் சேர்ந்தவர் குற்றவாளி என்பதால் தான் 25-ம் தேதி கைது செய்யப்பட்ட நபர் விடுதலை செய்யப்பட்டு பின்னர் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாருடைய அழுத்தத்தின் பேரில் அவர் முன்னர் விடுதலை செய்யப்பட்டார். இவர், தி.மு.க-வைச் சேர்ந்தவர் என்பது குறித்து அனைத்து ஆதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சட்டத்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் தி.மு.க-விற்கும் அதற்கும் சம்பந்தமில்லை.. அவர் தி.மு.க-வே கிடையாது என்று கூறுகின்றனர்.
இந்த விவகாரத்தில் சட்டத்துறை அமைச்சர், உயர் கல்வித்துறை அமைச்சர், காவல் ஆணையர் ஆகிய மூன்று பேரும் அளித்த பேட்டிகள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. யாரை மறைப்பதற்கு, யாரை காப்பாற்றுவதற்கு தி.மு.க அரசு வரிந்து கட்டிக் கொண்டுள்ளது. தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பாலியல் சீண்டல்கள், பாலியல் வன்கொடுமை ஆகியவை தொடர்ந்து நடைபெற்று கொண்டுள்ளது. பெண் காவல்துறை சார்ந்தவருக்கு ஏற்கனவே இது போன்று நடந்துள்ளது. தற்போது, மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் நீதிமன்றம் சொல்லித்தான் நடந்துள்ளது. அரசு எதுவுமே செய்யவில்லை இந்த ஆட்சிக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டத்தின் ஆட்சி இங்கு நடக்கவில்லை. இதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியரை, தி.மு.க பிரமுகர் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். அவர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகளோடு இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர் சுற்றுச்சூழல் அணியின் பொறுப்பாளராகவும் உள்ளார். இந்த விவகாரத்திலும் காவல்துறை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை அதேபோன்று, கரம்பக்குடியில் நர்சிங் கல்லூரி மாணவி மர்மமான முறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்துள்ளார். குற்றவாளியை இதுவரை கைது செய்யவில்லை. இன்னமும் அந்த பெண்ணின் பிரேதத்தை உறவினர்கள் வாங்கவில்லை. தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதேபோல், நாங்கள் இன்று போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி தான் நாங்கள் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டுள்ளோம். தொடர்ந்து போராடுவதற்கு அனுமதி அளிக்காமல் காவல்துறை மறுத்தால் அடுத்த கட்டமாக சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி பாலியல் வன்கொடுமை, பெண்கள் விவகாரம் உள்ளிட்டவைகளில் முதல் தகவல் அறிக்கையை வெளியிடக் கூடாது என்று தீர்ப்பு உள்ளது. அந்த தீர்ப்பை மீறி காவல்துறை அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர்-யை லீக் செய்துள்ளனர். இது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது.
ஏற்கனவே, கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்பட்டு சி.பி.ஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாகவும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க போராடும். சட்டத்துறை அமைச்சர் தொடர்ந்து தன்னை மறந்து பேசிக்கொண்டு உள்ளார்.
சட்டத்துறை அமைச்சருக்கு மைக் மேனியா வந்துவிட்டது. மைக்கை பார்த்தால் ஏதாவது பேச வேண்டும் என்று பேசிக்கொண்டு சென்று வருகிறார். கருத்துக்கள் சட்டபூர்வமாக இருக்க வேண்டும். ஆனால், அவர் கூறும் கருத்துக்கள் எதுவும் சட்டப்பூர்வமாக இல்லை. `யார் அந்த சார்?’ என்பது தமிழ்நாடு முழுக்க எழுந்துள்ள கேள்வி. இதை அ.தி.மு.க முன்னெடுத்து சென்றுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் யாரோ சார் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தான் நாங்கள் கேட்கிறோம்... யார் அந்த சார் என்பதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும். நீதிமன்ற வளாகம், அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றில் காவல்துறை பாதுகாப்பு போட வேண்டும் என்று தற்போது அரசு முடிவெடுத்துள்ளது...கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போன்றது. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சிறிய சம்பவங்கள் கூட தி.மு.க-வால் ஊதி பெரிதாக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.