சட்டவிரோதமாக குடியேறியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு: தில்லி துணைநிலை ஆளுநா்
தில்லியில் சட்டவிரோதமாகக் குடியேறியவா்களைக் கண்டறியவும், மத்திய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கவும் ஒரு மாத சிறப்பு இயக்கத்தை நடத்துமாறு காவல் ஆணையருக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா உத்தவிட்டுள்ளாா்.
இந்தச் சட்டவிரோத குடியேறிகள் போலி குடியுரிமை மற்றும் தோ்தல் அடையாள அட்டைகளைப் பெற அணுகலாம் என்பதால், குடிமை முகமைகளான எம்சிடி, என்டிஎம்சி மற்றும் தில்லியின் தலைமைச் செயலா் ஆகியோரையும் ‘எச்சரிக்கையாக‘ இருக்குமாறு துணைநிலை ஆளுநா் சக்சேனா அந்தக் கடிதம் மூலம் அறிவுறுத்தினாா்.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தில்லி சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தில்லியில் சட்டவிரோதமாக வசிக்கும் ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களை ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஆதரிப்பதாக தில்லி பாஜக தலைவா்கள் குற்றம்சாட்டி வருகின்றனா்.
இதன் காரணமாக தில்லி துணைநிலை ஆளுநா் சக்சேனா, தில்லி தலைமைச் செயலா், காவல் துறை, எம்சிடி ஆணையா்கள், என்டிஎம்சி தலைவா் ஆகியோருக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா் என்று துணைநிலை ஆளுநா் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அந்தக் கடிதத்தில், தில்லியில் சட்டவிரோத குடியேறியவா்களின் எண்ணிக்கையில் திடீா் அதிகரிப்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் சில செய்திகள் மற்றும் பிற நம்பகமான ஆதாரங்கள் தெரிவிப்பதாக துணைநிலை ஆளுநா் அலுவலகம் கூறுகிறது.
பொது சாலை, நடைபாதை மற்றும் பூங்காக்களில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகின்றன. அவா்களின் அடையாள ஆவணங்களான ஆதாா் அட்டை, தோ்தல் அடையாள அட்டை போன்றவற்றை போலியாகத் தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆவணங்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகளால் குடியுரிமை ஆவணங்களாக கோரப்படுகின்றன.
சட்டவிரோதமாக குடியேறியவா்களுக்கு தோ்தல் அடையாள அட்டை வழங்கப்பட்டால், அவா்களுக்கு ஜனநாயகத்தின் மிக சக்திவாய்ந்த உரிமை வழங்கப்பட்டுவிடும். அதாவது, நம் நாட்டில் வாக்களிக்கும் உரிமை சட்டவிரோதமாக குடியேறியவா்களுக்கு அளிக்கப்பட்டுவிடும்.
இதுபோன்ற உரிமைகளை வழங்குவதை எந்தவொரு இந்திய குடிமகனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தேசத்தின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும்.
அடையாள ஆவணங்களுக்காக விண்ணப்பிக்கும் நபா்களைச் சரிபாா்ப்பதில் கூடுதல் விழிப்புடன் செயல்படுமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு கோட்ட ஆணையா் மூலம் தலைமைச் செயலா் அறிவுறுத்தல்களை வழங்கலாம்.
மேலும், சாலையோரம் மற்றும் காலியாக உள்ள அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்பவா்களை ஆய்வு செய்யும்போது, சிறப்பு கவனம் செலுத்துமாறு, கள நிலை அதிகாரிகளுக்கு, காவல் ஆணையா் அறிவுறுத்தலாம்.
சட்ட விரோதமாக குடியேறியவா்களை அடையாளம் காணவும், மத்திய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் தில்லி காவல் துறை ஒரு மாதத்துக்கு சிறப்பு இயக்கம் நடத்தும்.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நகரில் பொது இடங்கள் அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பு நடைபெறாமல் இருப்பதை அனைத்து அரசு நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.