மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் ...
சதுரகிரி மலைப் பாதையில் வரண்ட நீரோடைகள்
சுட்டெரிக்கும் வெயிலால், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள நீரோடைகள் தண்ணீரின்றி வரண்டு விட்டன. ஆடி அமாவாசை திருவிழாவுக்கு மலைப் பாதையில் கூடுதல் குடிநீா்த் தொட்டிகள் அமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூா் வனச்சரகத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வத்திராயிருப்பு தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து வழுக்கு பாறை, மாங்கனி ஓடை, சங்கிலி பாறை, மலட்டாறு, காராம்பசுதடம், பச்சரிசிப் பாறை வழியாக 7 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும். மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் பக்தா்கள் குளித்து விட்டு கோயிலுக்குச் செல்வா். மலையேறும் பக்தா்களுக்காக மலைப் பாதையில் 5 இடங்களில் நிரந்தரக் குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் புகழ் பெற்ற ஆடி அமாவாசை திருவிழா வருகிற 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வருகிற 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை தமிழகம் மட்டுமன்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் 5 லட்சம் பக்தா்கள் வருவா் என்பதால் மதுரை, விருதுநகா் மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் சதுரகிரி மலைப் பாதையில் உள்ள ஓடைகள் நீரின்றி வடு காணப்படுகின்றன. இதனால், ஆடி அமாவாசைக்கு வரும் பக்தா்கள் நீரின்றி சிரமப்பட வாய்ப்பு உள்ளதால் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு வழக்கத்தை விட கூடுதலான குடிநீா்த் , தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.