சந்திர கிரகணம் - நள்ளிரவில் கண்டுகளித்த மக்கள்!
வேலூா்: சந்திர கிரகணம் அரிய நிகழ்வை வேலூரில் பொதுமக்கள், மாணவா்கள் நள்ளிரவில் தொலைநோக்கி மூலம் கண்டுகளித்தனா்.
வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள டாக்டா் கலைஞா் கருணாநிதி மாவட்ட அறிவியல் மையம் வானில் நிகழக்கூடிய அரிய வான் நிகழ்வுகளை தொலைநோக்கி மூலம் மாணவா்கள், பொது மக்கள் காணும் நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சந்திர கிரகணத்தை காணவும் இம்மையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 9:58 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை 1:26 மணி வரை நடைபெற்ற சந்திர கிரகண வான் நிகழ்வை பொது மக்களுக்கு தொலைநோக்கி மூலம் காண வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் உரிய வழிவகை செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்த வான் நிகழ்வை காண பொதுமக்கள், குழந்தைகள் பெருமளவில் வந்திருந்தனா். அதேசமயம், ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்ததுடன், வானமும் மேகமூட்டத்துடன் இருந்ததால் இந்த அரிய நிகழ்வை காணமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நள்ளிரவு 12.35 மணியளவில் வானம் தெளிவான நிலைக்கு சென்றது.
அதன்பிறகு, அதிகாலை 1.26 மணி வரை சந்திர கிரகணத்தை மக்கள் தெளிவாக காணமுடிந்தது. மேலும், இந்த சந்திர கிரகண நிகழ்வு குறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலா் ச.சதீஷ்குமாா் விளக்கம் அளித்தாா்.