சனிப்பெயர்ச்சி 2025 மிதுனம் : `எப்போது தொழில் தொடங்கலாம்?' - வாய்ப்புகள் என்னென்ன?
திருக்கணிதப்படி வரும் மார்ச் 29.3.25 அன்று கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். மிதுன ராசிக்கு 10-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். எதிர்பாராத அனுகூலம், செல்வாக்கு கூடிவரும். எனினும், வியாபாரம் மட்டுமன்றி அனைத்து விஷயங்களிலும் தெளிவோடு முடிவெடுக்க வேண்டிய காலம் இது.
மிதுன ராசிக்காரர்களுக்கான 15 பலன்கள்:
1. பத்தாம் இடத்தில் வந்து அமரும் சனிபகவானால், உத்தியோகம் - தொழில் போன்றவை பாதிப்படையுமோ என்று கவலை வேண்டாம். தொழிலில், பணியில் சற்றுக் கவனத்துடன் இருந்தால் போதும்; பாதிப்புகள் இல்லை. எதிலும் அகலக்கால் வைக்காமல் பொறுமையுடன் செயல்பட்டால் எவ்வித பாதிப்புகள் நேராது.
2. சனி பகவான் மீனத்தில் அமர்ந்திருக்கும் இந்த வேளையானது, நீங்கள் இழந்ததை மீண்டும் பெறக்கூடிய காலமாக இது இருக்கும். இழந்த பணம் கைக்கு வரும். கைமாற்றுக் கடன்களை அடைப்பீர்கள். உங்களில் சிலர் சேமிக்கத் தொடங்கும் அளவுக்குச் சூழல் சாதகமாகும்.
3. குடும்பத்தில் மனைவி வழியில் ஆதரவு பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கியில் கடன் கிடைக்கும். பேசாமல் இருந்து வந்த சகோதரர் இனி பேசுவார். குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியர்க்கு குழந்தைப் பாக்கியம் உண்டாகும். தந்தை வழியில், எதிர்பாராத வகையில் சில அனுகூலங்கள் உண்டாகும்.
4. சமூகத்திலும் வெளிவட்டாரத்திலும் செல்வாக்கும் மதிப்பும் உயரும். நட்பு வட்டாரத்தில், உங்களுடன் பழகிக்கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒதுக்குவீர்கள். திருக்கோயில் திருப்பணிகளில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். வழக்கு வியாஜ்ஜியங்களில் சாதகமான நிலை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

5. இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உண்டு. இளையோருக்கு அவர்கள் விரும்பியபடி மண வாழ்க்கை அமையும்.
6. வியாபாரம் தொழில் பெருகும். உத்தியோகம் கிடைக்கும். இவை ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு நடக்கும். வருமானமும் பெருகும். தொழில் மேன்மைக்காக சுபச் செலவுகளுக்காக, அளவுடன் கடன் வாங்கலாம். எனினும் எவருக்கும் ஜாமீன் கொடுக்கவேண்டாம்.
7. பெண்களுக்குச் சந்தோஷமான சூழல்கள் அமையும். புது உறவுகள் வந்துசேரும். சொத்து விவகாரங்கள் சாதகமாக முடியும். அச்சமே தேவையில்லை.
8. சனி பகவான் மீனத்தில் அமர்ந்து, உங்கள் ராசிக்கு 4, 7 மற்றும் 12-ம் வீட்டைப் பார்க்கிறார். 4-ம் வீடு சனியின் பார்வையைப் பெறுவதால், புது வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு, தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். எதன்பொருட்டும் எவருக்காகவும் பொறுப்பேற்று சாட்சிக் கையெழுத்திடவேண்டாம்.
9. சனி உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்குக் கர்ப்பப்பை கோளாறு, சிறுசிறு அறுவைசிகிச்சை வந்து நீங்கும். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும்.
10. சனி பகவான் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும். மொத்தத்தில் வேலைப்பளுவும், சவால்களும் உண்டு என்றாலும் கூட, உங்களுக்குள் தன்னம்பிக்கை வளரும் காலமாக அமைகிறது.
11. இந்த ராசியைச் சேர்ந்த மிருகசீரிட நட்சத்திர அன்பர்கள், வியாபாரம் - தொழிலை விருத்தி செய்யலாம். அதேநேரம், ஏதேதோ வாய்ப்புகள் வருகிறது என்பதற்காக, புதிய வேலைக்கு முயற்சிக்கவேண்டாம். மே மாதம் வரையிலும் எந்தவொரு புது முடிவுகளும் வேண்டாம்.

12. திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு, செப்டம்பருக்குப் பிறகு நல்ல காலம் பிறக்கும். புதிய திட்டங்களை அப்போது செயல்படுத்தலாம். புதுத் தொழில் தொடங்குவது, மேற்படிப்புக்கான முயற்சிகளுக்கு அப்போது நல்ல பலன் கிடைக்கும்.
13. புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்குப் பயணங்கள் அதிகமாகும். அதனால் சிறியளவில் ஆதாயமும் உண்டு. இவர்கள் பணி நிமித்தமான சந்திப்புகளில் கவனத்துடன் செயலாற்ற வேண்டும்.
14. இந்த ராசியைச் சேர்ந்த கலைஞர்களுக்கு விருதும், பரிசும் கிடைக்க வாய்ப்பு உண்டு. வீண் விமர்சனங்கள் குறித்து கவலை வேண்டாம். அறிவியல் சம்பந்தப்பட்டவர்களுக்கும் புதிய கண்டு பிடிப்புகள் கைகூடும்; அதனால் விருதுகளும் கிடைக்கும்.
15. இந்த ராசிக்காரர்கள், பொதுக் காரியங்களில் பங்களிப்பு செய்தாலும் முன்னணியில் நிற்கவேண்டாம். பொது இடங்களில் வீண் விமர்சனங்கள், வாக்குவாதங்களைத் தவிர்த்துவிடுங்கள். பங்குச்சந்தை, வழக்குகள் போன்ற விஷயங்களில் தக்க நிபுணர்களின் ஆலோசனையுடன் செயல்படுவது நல்லது.