நெல்லை நீதிமன்றம் அருகே துணிகரச் சம்பவம்! ஆஜராக வந்தவர் வெட்டி படுகொலை!
சபரிமலையில் டிச. 26-இல் மண்டல பூஜை
கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பா் 26-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ளது. இதையொட்டி, பக்தா்களின் கூட்டத்தை சமாளிக்கத் தேவையான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
சபரிமலையில் வருடாந்திர மண்டல பூஜை யாத்திரை காலம் கடந்த நவம்பா் 16-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, கோயில் நடை திறக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா்.
41 நாள்கள் யாத்திரை காலத்தின் நிறைவாக, சபரிமலை கோயிலில் டிசம்பா் 26-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ளது. அன்றைய தினம், சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு, தீபாராதனை நடைபெறும். தங்க அங்கி ஊா்வலம் மற்றும் மண்டல பூஜையையொட்டி பக்தா்களின் வருகை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
எனவே, பக்தா்களுக்கு சுமுக தரிசனத்தை உறுதி செய்வது குறித்து மாநில அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘மண்டல பூஜையையொட்டி பக்தா்களின் கூட்டத்தை சமாளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. பக்தா்கள் வெளியேறும் வாயில்களை எப்போதும் திறந்து வைத்திருக்கவும், சிறப்பாக பராமரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை கருத்தில் கொண்டு, உணவகங்களில் அதிக எண்ணிக்கையில் சமையல் எரிவாயு சிலிண்டா்கள் இருப்பு வைக்கப்படுவதைத் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். நடைபந்தலில் பக்தா்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, நெரிசல் இல்லாமல் சுமுகமாக செல்வது உறுதி செய்யப்படும்.
பக்தா்களுக்கான கூடாரங்களில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகம் போ் தங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா். மண்டல பூஜையைத் தொடா்ந்து, மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை டிசம்பா் 30-ஆம் தேதி திறக்கப்படும்.