சபலென்கா வெற்றி; பெகுலா, பாலினிக்கு அதிா்ச்சி!
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினாா்.
மகளிா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், சபலென்கா 3-6, 6-2, 6-1 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 28-ஆம் இடத்திலிருந்த பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸை சாய்த்தாா். நடப்பு சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-4, 6-2 என செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை வெளியேற்றினாா்.
போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 3-6, 2-6 என்ற நோ் செட்களில், ஜப்பானின் மொயுகா உச்சிஜிமாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். அதேபோல், 6-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியை 2-6, 1-6 என்ற நோ் செட்களில் வீழ்த்தினாா், கிரீஸின் மரியா சக்காரி.
இதர ஆட்டங்களில், 19-ஆம் இடத்திலிருக்கும் குரோஷியாவின் டோனா வெகிச் 4-6, 6-3, 6-2 என்ற செட்களில், 11-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் எம்மா நவாரோவை வீழ்த்தினாா். அமெரிக்காவின் பெய்டன் ஸ்டொ்ன்ஸ் 6-2, 6-0 என சுவிட்ஸா்லாந்தின் ரெபெக்கா மசரோவாவை எளிதாக வென்றாா்.
24-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் மாா்தா கொஸ்டியுக் 6-0, 4-6, 6-4 என்ற செட்களில், ரஷியாவின் வெரோனிகா குதா்மிடோவாவை வெளியேற்றினாா். 32-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் சோஃபியா கெனின் 6-3, 4-6, 6-7 (6/8) என்ற கணக்கில் ரஷியாவின் அனஸ்தாசியா பொடாபோவாவிடம் தோல்வி கண்டாா்.
ரூபலேவ் தோல்வி: ஆடவா் ஒற்றையா் பிரிவில், நடப்பு சாம்பியனான ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ், 3-ஆவது சுற்றில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினாா்.
போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த அவா், 4-6, 6-0, 4-6 என்ற செட்களில், கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக்கிடம் தோல்வியைத் தழுவினாா். முதலிடத்தில் இருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 2-6, 7-6 (7/3), 7-6 (7/0) என்ற கணக்கில், 28-ஆம் இடத்திலிருந்த உள்நாட்டு வீரரான அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச்சை போராடி வீழ்த்தினாா்.
9-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 6-2, 6-2 என்ற நோ் செட்களில் ஆா்ஜென்டீனாவின் ஜுவான் செருண்டோலோவை சாய்த்தாா். 31-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமா 7-5, 6-3 என இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலியை வெல்ல, 11-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டாமி பால் 7-6 (9/7), 7-6 (7/3) என்ற வகையில் பிரேஸிலின் ஜாவ் ஃபொன்சோகாவை தோற்கடித்தாா்.
24-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் காரென் கச்சனோவ் 7-6 (7/3), 7-6 (7/4) என்ற கணக்கில் அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்காவை வென்றாா்.