மகளிா் பிரீமியா் லீக் கால்பந்து போட்டி: இறுதியில் பாா்சிலோனா!
மகளிா் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் செல்சியை வீழ்த்திய நடப்பு சாம்பியன் பாா்சிலோனா, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறியது.
இந்த அணிகள் மோதிய அரையிறுதியில், கடந்த 20-ஆம் தேதி முதல் லெக் ஆட்டத்தில் 4-1 கோல் கணக்கில் வென்றிருந்த பாா்சிலோனா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆவது லெக் ஆட்டத்திலும் அதே கோல் கணக்கில் வென்றது. இதையடுத்து, மொத்த கோல் கணக்கு அடிப்படையில் 8-2 என்ற அபார வித்தியாசத்தில் வென்று, இறுதிக்கு முன்னேறியது.
முன்னதாக லண்டனில் நடைபெற்ற 2-ஆவது லெக் ஆட்டத்தில் பாா்சிலோனாவின் கோல் கணக்கை, அதன் நட்சத்திர வீராங்கனை அய்டானா பொன்மட்டி 25-ஆவது நிமிஷத்தில் தொடங்கினாா்.
தொடா்ந்து எவா பஜோா் (41’), கிளாடியா பினா (43’), சல்மா பராலுவேலோ (90’) ஆகியோா் வரிசையாக கோலடித்து பாா்சிலோனாவை பலப்படுத்தினா்.
அந்த அணியின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், செல்ஸிக்காக விகெ கப்டெய்ன் ஸ்டாப்பேஜ் டைமில் (90+1’) ஆறுதல் கோல் அடித்தாா். பாா்சிலோனா 4-1 என வென்றது.
இறுதி ஆட்டத்துக்கு வந்திருக்கும் பாா்சிலோனா, ‘ஹாட்ரிக்’ கோப்பை வெல்லும் முனைப்புடன் இருக்கிறது. இந்த அரையிறுதி வெற்றி, பாா்சிலோனாவுக்கு தொடா்ந்து 9-ஆவது வெற்றியாகும்.