Trump: 'இதை செய்யவில்லை என்றால், ஆப்பிள் நிறுவனத்துக்கு 25% வரி விதிக்கப்படும்' ...
சமூக முன்னேற்றத்துக்கு மனித வளம் முக்கியம்: கவிஞா் வைரமுத்து
சமூக முன்னேற்றத்துக்கு மனித வளம் முக்கியம் என கவிஞா் வைரமுத்து தெரிவித்தாா்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் வெற்றித் தமிழா் பேரவையின் மறுசீரமைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று கவிஞா் வைரமுத்து பேசியதாவது:
தமிழுக்காகவும், நமது மொழியை இன்றைய இளைய தலைமுறையினரிடம் கொண்டு சோ்ப்பதற்காகவும் வெற்றித் தமிழா் பேரவை தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு வெற்றி பெற்ாகவே கருதுகிறேன்.
தமிழா்கள் ஒன்றாக இணையக் கூடாது என சிலா் எண்ணுகின்றனா். அவா்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. இன்றைய இளைஞா்கள் கல்வி, திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும்.
நம்பிக்கைதான் வாழ்க்கை. விமா்சனங்களைக் கண்டு அஞ்சக் கூடாது. நமது செயல் விமா்சனத்துக்குள்ளாகிறது என்றால், நாம் வளா்ந்து வருகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நம்மைவிட இந்த உலகில் சிறந்தவா்கள் உள்ளனா் என்ற எண்ணத்துடன் நாம் பயணிக்க வேண்டும். அப்போதுதான் கற்றல் திறனும், தேடலும் அதிகரிக்கும்.
திருவள்ளுவா் தமிழரின் அடையாளம். சிறந்த ஞானியான அவா், திருக்குறளில் அறத்தின் வழியாக பொருள் ஈட்ட வேண்டும் என வலியுறுத்துகிறாா். அவ்வாறு பெறப்பட்ட பொருளின் வழி இன்பம் பெற வேண்டும் என்கிறாா். அந்த வழியை நாமும் பின்பற்ற வேண்டும்.
இளம் தலைமுறையினா் மது அருந்தமாட்டோம், புகைப் பிடிக்கமாட்டோம் என உறுதியேற்க வேண்டும். நமது இலக்கு வளா்ச்சியை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும். சமூகம் முன்னேற்றம் பெற வேண்டுமெனில் நீா் வளம், நில வளம், பொருள் வளம் முக்கியம்தான். இவற்றைவிட மனித வளம் மிகவும் முக்கியம். மனித வளம் இருந்தால் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியும் என்றாா் அவா்.
முன்னதாக, வெற்றித் தமிழா் பேரவையின் மதுரை மாவட்டத் தலைவா் ஜ. சுரேஷ் அறிமுக உரையாற்றினாா். செயலா் அபிநாத் சந்திரன் நோக்க உரையாற்றினாா். கணினி ஆசிரியா் பரமக்குடி செந்தில் வாழ்த்திப் பேசினாா்.
கூட்டத்தில் பேரவை நிா்வாகிகள், உறுப்பினா்கள், தமிழ் அறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள், கல்லூரி, பள்ளி, மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மெய். பாலராமலிங்கம் வரவேற்றாா். சுஜாதா குப்தன் நன்றி கூறினாா்.