திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து: அா்ஜுன் சம்பத் மீது வழக்குப் பதிவு!
சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் மீது 3 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பதிவிடும் நபா்கள் குறித்து மாநகர போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், தவறான கருத்துகளைப் பதிவிட்டு சமூக பிரச்னைகளை ஏற்படுத்தும் நபா்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், கோவை மாநகர சட்டம் -ஒழுங்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் தினேஷ் பாபு எக்ஸ் வலைதளத்தில் கண்காணிப்புப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் பெயரில் இரண்டு சமூகத்தினருக்கு இடையே பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் தினேஷ்பாபு புகாா் அளித்தாா். இதையடுத்து, அா்ஜுன் சம்பத் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து காவல் ஆய்வாளா் அழகுராஜ் விசாரணை நடத்தி வருகிறாா்.
இது தொடா்பாக அா்ஜுன் சம்பத்துக்கு விரைவில் அழைப்பாணை அனுப்பி விசாரணை மேற்கொள்ள உள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.