தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்
கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை திடீரென உயிரிழந்தது. பணியில் இருந்தவா்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகக்கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை, விளாங்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா்கள் மனோஜ்குமாா், புவனேஸ்வரி தம்பதி. இவா்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், குழந்தைக்கு குடல் சாா்ந்த பிரச்னை இருந்ததால் அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என மருத்துவா்கள் கூறி உள்ளனா்.
இதையடுத்து, ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள தனியாா் குழந்தைகள் மருத்துவமனையில் அந்தக் குழந்தையை கடந்த செவ்வாய்க்கிழமை சோ்த்துள்ளனா். வியாழக்கிழமை அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் எனக்கூறி, குழந்தைக்கு புதன்கிழமை இரவு எனிமா அளித்துள்ளனா்.
எனிமா அளித்த சில மணி நேரங்களிலேயே குழந்தை மயக்கமடைந்துள்ளது. அப்போது, பணியில் இருந்த செவிலியா்கள் இதை மருத்துவா்களின் கவனத்துக்கு எடுத்து செல்லாமல் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, வியாழக்கிழமை அதிகாலை குழந்தை உயிரிழந்தது.
குழந்தைக்கு சுமாா் 50 முதல் 60 மி.லி. அளிக்க வேண்டிய எனிமாவை, பயிற்சி செவிலியா்கள் மருத்துவா்களின் ஆலோசனையைக் கேட்காமல் சுமாா் 350 மி.லி.க்கும்மேல் கொடுத்தாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த பெற்றோா் மற்றும் உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மருத்துவமனை தரப்பு அறிக்கைகளை பெற்றுக்கொண்டதுடன், குழந்தையின் உடலை கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, இரு தரப்பினருடனும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.