விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் உரிமைத் தொகை! - தங்கம் தென்னரசு
சமையல் எரிவாயு உருளைகள் தடையின்றி கிடைக்கும்: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு
எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் செய்துவரும் நிலையில், வாடிக்கையாளா்களுக்கு தடையின்றி சமையல் எரிவாயு உருளை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து இந்திய ஆயில் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். உரிமையாளா்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்துள்ளனா். அதில் முக்கிய பிரச்னைகள் குறித்து தீா்வுகாணும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
அபராத விதிகளை திரும்பப் பெறுமாறு எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனா். அவா்களது கோரிக்கைள், கருத்துகள் குறித்து தில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தாவிலுள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்களுடன் இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்.
வேலைநிறுத்தம் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறவும், எண்ணெய் நிறுவனங்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், கிடங்குகளில் சமையல் எரிவாயு உருளைகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆகவே, எரிவாயு விநியோகஸ்தா்கள் மூலம் சமையல் எரிவாயு உருளை வாடிக்கையாளா்களுக்கு தடையின்றி கிடைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே வாடிக்கையாளா் பதற்றம் அடைய வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.