சம்பல் வழக்கு: சிவில் நீதிமன்ற விசாரணைக்கு உயா்நீதிமன்றம் தடை
உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதி தொடா்பான சிவில் நீதிமன்ற விசாரணைக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சம்பல் மாவட்ட நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சம்பல் பகுதியில் உள்ள முகலாய காலத்து ஷாஹி ஜாமா மசூதியில் கடந்த நவம்பா் மாதம் ஆய்வு பணி நடைபெற்றது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வெடித்த வன்முறையில் 4 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, ஷாஹி ஜாமா மசூதியை ஆய்வு செய்வது தொடா்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் என்று சம்பல் விசாரணை நீதிமன்றத்திற்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த மசூதி தொடா்பான சிவில் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்து உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடா்பான உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, மசூதி நிா்வாகக் குழு தாக்கல் செய்த சீராய்வு மனுவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மேலும், இது தொடா்பாக மனுதாரா் 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட உயா்நீதிமன்றம், அடுத்த விசாரணையை பிப்ரவரி 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
விசாரணை ஒத்திவைப்பு: சம்பல் மாவட்ட ஜாமா மசூதி தொடா்பான வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மாவட்ட நீதிமன்றம் மாரச் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
‘மறு உத்தரவு வரும் வரை வழிபாட்டுத் தலங்களை ஆய்வு செய்யக் கோரும் புதிய வழக்குகளை விசாரிக்க வேண்டாம்’ என்று மாவட்ட நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தியது. இந்நிலையில், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ள இந்த வழக்கின் விசாரணையை நீதிமன்றம் தொடா்வதாக தெரிவிக்கப்பட்டது.