``சல்மான் கானை திருமணம் செய்து கொள்ளுங்கள். ஏனென்றால்..'' -ரசிகரின் வேண்டுதல், அமீஷா பட்டேல் பதில்!
பாலிவுட்டில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நடிகராக இருப்பது சல்மான் கான் மட்டுமே. நடிகைகளில் அமீஷா பட்டேல், தபு, கங்கனா ரனாவத் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால் நடிகர்களில் சல்மான் கான் போன்ற ஒரு சிலரை மட்டுமே குறிப்பிட்டு சொல்ல முடியும். சல்மான் கான் ஆரம்பத்தில் சில நடிகைகளை காதலித்தார். ஆனால் அந்த காதல் நிறைவேறாத காரணத்தால் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார்.
தற்போது 49 வயதாகும் நடிகை அமீஷா பட்டேல் ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அவ்வாறு சாட்டிங் செய்து கொண்டிருந்தபோது ரசிகர்கள் சிலர், ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகர் சல்மான் கானை நீங்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று கேட்டனர். இந்த சாட்டிங் விபரங்களை அமீஷா பட்டேல் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அதில் ரசிகர்கள் என்னிடம் ட்விட்டர் சாட்டிங்கில் சல்மான் கான் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். நீங்களும் இன்னும் திருமணம் செய்யவில்லை. பார்ப்பதற்கும் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். எனவே அழகான குழந்தைகளுக்காக சல்மான் கானை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று என்னிடம் கேட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
`அழகானவர்கள் ஒன்று சேரவேண்டும் என்று...'
அதில் அமீஷா பட்டேல் தனது கருத்தையும் பகிர்ந்துள்ளார். அழகானவர்கள் ஒன்று சேரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அழகானவர்கள் ஒன்று சேரவேண்டும் என்று உலகம் விரும்புவதாக நினைக்கிறேன். அதற்கான காரணமும் இருக்கிறது. 'கஹோ நா பியார் ஹை' படம் வெளியானபோது நானும் ஹ்ரித்திக் ரோஷனும் ஒன்று சேரவேண்டும் என்று மக்கள் விரும்பினர். ஹ்ரித்திக் ரோஷன் திருமணம் செய்து கொண்டபோது ரசிகர்கள் இதயம் நொறுங்கியது. அவர்கள் விரும்புவது நடக்காது''என்று குறிப்பிட்டார்.
நான் திருமணம் செய்ய தயாராகத்தான் இருக்கிறேன். ஆனால் மாப்பிள்ளைதான் இன்னும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டும் ட்விட்டர் சாட்டிங்கில் சில ரசிகர்கள் அமீஷா பட்டேலிடம் நீங்கள் சல்மான் கானை திருமணம் செய்யலாம் என்று ஆலோசனை வழங்கினர். அமீஷா பட்டேல் தன்னை விட 8 வயது அதிகமான இயக்குனர் விக்ரம்பட் என்பவரை 8 ஆண்டுகள் காதலித்தார். அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு தொழிலதிபர் நெஸ் வாடியா என்பவரை காதலிப்பதாக செய்திகள் வெளியானது. தயாரிப்பாளர் குணால் என்பவருடன் குறுகிய காலம் அமீஷா பட்டேல் உறவில் இருந்தார். இப்போது தொழிலதிபர் நிர்வான் பிர்லா என்பவருடன் உறவில் இருப்பதாக கூறுகின்றனர்.