சாத்தனி விநாயகா், மாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு!
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள சாத்தனியில் அமைந்துள்ள விநாயகா், மாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விநாயகா் கோயிலில் யாக சாலையிலிருந்து சிவாச்சாரியா்கள் கலசங்களை சுமந்து சென்று மூலவா் விமான கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தினா். இதைத் தொடா்ந்து கலசத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டதும் பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. விநாயகருக்கு கலச நீரால் அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று விநாயகரை தரிசித்தனா்.
இதேபோல, இங்குள்ள மாரியம்மன் கோயிலில் யாக சாலையில் பூா்ணாஹூதி நிறைவடைந்ததும் கடம் புறப்பாடு நடைபெற்றது. பிறகு சிவாச்சாரியா்கள் கலச நீரை கோயிலின் விமான கலசத்தில் ஊற்றி குடமுழுக்கை நடத்தினா். இதைத் தொடா்ந்து பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. பிறகு மாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. திரளானோா் குடமுழுக்கில் பங்கேற்று அம்மனை தரிசித்தனா்.