பள்ளி மாணவா்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்!
சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், கல்லூரிகள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடல்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கும் முகாமை ஆட்சியா் ஆஷாஅஜித் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
சிவகங்கை மருதுபாண்டியா் நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகளை ஆட்சியா் வழங்கினாா். பின்னா், அவா் கூறியதாவது:
மாவட்டத்திலுள்ள 1 முதல் 19 வயது வரை உள்ள 3,77,552 பயனாளிகளுக்கும், 20-30 வயது வரை உள்ள 87,625 பெண்களுக்கும் என மொத்தம் 4,65,177 பயனாளிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
210 கிராம சுகாதார செவிலியா்கள், 17 ஆஷா பணியாளா்கள், 1,295 அங்கன்வாடி பணியாளா்கள், 1,665 பள்ளி, கல்லூரி பொறுப்பு ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் மூலமாக இந்த மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. விடுபட்டவா்களுக்கு வருகிற 17-ஆம் தேதி அன்று மாத்திரைகள் வழங்கப்படும் என்றாா் அவா்.