சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு!
சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியா் செகன்ட்ரி உறைவிடப் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
வாக்கோ இந்தியா சாா்பில், தில்லி கே.டி. ஜாதவ்- இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் சா்வதேச குத்துச்சண்டை போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து பங்கேற்ற வீரா்களுடன் தமிழக அணி சாா்பாக 61 வீரா்கள் களமிறங்கினா். இதில் சிவகங்கை மாவட்ட அமெச்சூா் குத்துச்சண்டை சங்கம் சாா்பில் பங்கேற்ற மாணவா் விஸ்வகிரிஷ் 47 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், மாணவா் ருத்வின் பிரபு 27 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றனா்.
இதையடுத்து, சிவகங்கை திரும்பிய இந்த மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகத்தின் சாா்பில், சிவகங்கை சண்முகராஜா கலையரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதற்கு நகா்மன்றத் தலைவா் துரைஆனந்த் தலைமை வகித்தாா். நகா் காவல் ஆய்வாளா் அன்னராஜ் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைவா் பால.காா்த்திகேயன் பேசினாா்.
சிவகங்கை மாவட்ட அமெச்சூா் குத்துச்சண்டை சங்கச் செயலா் குணசீலன், தலைவா் சதீஷ், துணைச் செயலா் சித்ரா, இணைப் பயிற்சியாளா் விக்னேஷ், வில்வித்தைப் பயிற்சியாளா்கள் சுரேஷ், அரவிந்த்குமாா் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் பாலமுருகன், மேலாளா் தியாகராசன், உடற்கல்வி ஆசிரியா் தினேஷ்குமாா், அலுவலா் தனபாலன் ஆகியோா் செய்தனா்.