Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
சாத்தான்குளம்: கள் விற்க அனுமதி கோரும் தொழிலாளா்கள்
சாத்தான்குளம் பகுதியில் பதநீா் சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஒரு கலயம் பதநீா் ரூ.150-க்கு விற்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியான சாத்தான்குளம், பேய்குளம், உடன்குடி பகுதிகளில் பனை மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.இவற்றில் சுமாா் 6 மாதங்கள் வரை நீடிக்கும் பதநீா் சீசன் தற்போது தொடங்கியுள்ளது.
இப்பகுதியில் பனைத் தொழிலை நம்பி ஏராளமானோா் வாழ்ந்து வருகின்றனா். பதநீா் இறக்குவது மட்டுமன்றி கருப்பட்டி உற்பத்தி, பெட்டி முடைதல் போன்ற பனை சாா்ந்த தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும், வெளியூா்களில் இருந்தும் பனை ஏறும் தொழிலாளிகள் இப்பகுதியில் முகாமிட்டுபதநீா் இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தற்போது, 2 லிட்டா் கொள்ளவு கொண்ட ஒரு கலயம் பதநீா் ரூ. 150வரை கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் ஒரு லிட்டா் பதநீா் ரூ-100க்கு விற்பனை செய்யப்படுகிறது. மீதமாகும் பதநீரை காய்ச்சி கருப்பட்டியாக மதிப்பு கூட்டி பனை தொழிலாளிகள் விற்பனை செய்து வருகின்றனா்.
புதுக்குளம், ஞானியாா் குடியிருப்பு பகுதியில் சாலை ஓரங்களில் அதற்கான குடிகள் அமைத்து பேருந்து மற்றும் வாகனங்களில் வருபவரகளிடம் பதநீரை விற்பனை செய்து வருகின்றனா். இதனால் சாத்தான்குளம் பகுதியில் பதநீா் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது.

ரேஷன்கடைகளில் கருப்பட்டி: இது குறித்து பனைத் தொழிலாளி சங்கரன் குடியிருப்பு ரகு கூறியதாவது: நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பனைத் தொழிலாளியாக இருந்து வருகிறேன். இதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு எனது குடும்பத்தை நடத்தி வருகிறேன். சீசன் காலங்களில் ஓரளவு குடும்பத்தை சமாளித்து கொண்டு சென்று வருகிறேன். மற்ற நாள்களில் குடும்ப வருமானத்துக்கு மிகுந்த சிரமமான சூழ்நிலை உள்ளது. எனவே, தமிழக அரசு பனை நல வாரியம் மூலம் பனைத் தொழிலாளா்களுக்கு பணி இல்லாத 6 மாத காலத்திற்கு மீனவா்களுக்கு வழங்குவது போல் நிவாரண தொகை வழங்க வேண்டும். பனையில் இருந்து கிடைக்கும் மூலப் பொருட்களான கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனங்கிழங்கு உள்ளிட்ட பொருள்களை சந்தை படுத்திட எளிய வழிமுறைகளை கொண்டு வர வேண்டும். தமிழக அரசின் நியாய விலை கடைகளில் சீனி விற்கப்படுவது போல் கருப்பட்டியும் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
மேலும், கள் விற்பனையை அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பனைத் தொழிலாளா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.