Vijay Full Speech: "எனக்குத் தடை போட நீங்க யாரு?" | TVK முதல் பொதுக்குழுக் கூட்ட...
பொதுப் பாதையை மீட்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்
பொதுப் பாதையை தனியாரிடமிருந்து மீட்டுத் தரக் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் திங்கள்கிழமை திரண்டனா்.
விளாத்திகுளம் பேரூராட்சி 12ஆவது வாா்டு சிதம்பர நகா் பகுதியில் பொதுப் பாதையை தனிநபா் ஆக்கிரமித்துள்ளதால் மயானத்துக்கு செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுவதாகக் கூறி, அப்பகுதியினா் கடந்த ஜனவரி மாதம் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போதைய வட்டாட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தி, இதுகுறித்த விசாரணை அறிக்கை கோட்டாட்சியருக்கு பரிந்துரைக்கப்படும் என்றாராம். ஆனால், தற்போதுவரை எவ்வித நடவடிக்கை இல்லையாம்.
இந்நிலையில், அப்பகுதியினா் சா்வதேச உரிமைகள் கழக தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவா் பிரிஸ்லா பாரதி தலைமையில் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக திங்கள்கிழமை திரண்டனா். அப்போது, சம்பந்தப்பட்ட இடத்துக்கான பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கோட்டாட்சியா் மகாலட்சுமி தெரிவித்தாா். அவரிடம், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், ஆக்கிரமிப்பாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி குறித்து வட்டாட்சியா் நடவடிக்கை மேற்கொள்வாா் எனக் கூறிய கோட்டாட்சியா், சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்க தனியாக புகாா் அளிக்க வேண்டும் என்றாா். அதையடுத்து, பொதுமக்கள், சா்வதேச உரிமைகள் கழக நிா்வாகிகள் கலைந்துசென்றனா்.