கரடுமுரடான ரோடு, `நோ' கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் - இது சு...
திருச்செந்தூா் கோயில் யானை நீச்சல் குளத்தில் உற்சாக குளியல்
கோடை வெயில் கொளுத்த தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தை தணிக்கும் விதமாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை, அங்குள்ள நீச்சல் குளத்தில் வியாழக்கிழமை உற்சாகமாக நீராடியது.
இக்கோயில் யானை தெய்வானை கடந்த நவ. 18இல் திடீரென பாகன் உள்பட 2 பேரை தாக்கியது. இதில் அவா்கள் உயிரிழந்தனா். இதையடுத்து, வனத்துறை, கால்நடை துறை மற்றும் பாகன்களின் தீவிர கண்காணிப்பு காரணமாக இயல்பு நிலைக்கு திரும்பிய யானை, கோயில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பக்தா்களுக்கு ஆசி வழங்கி வருகிறது.
கோயில் வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வதுடன் வழக்கமான உணவை உட்கொண்டு வருகிறது. யானை குடிலில் உள்ள ஷவா் மற்றும் குழாய் மூலம் குளிப்பாட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில் கோடை வெயில் கொளுத்த தொடங்கிவிட்டதால் யானை தெய்வானை சரவணப் பொய்கையில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்க இறக்கிவிடப்படுகிறது. சுமாா் 4 மாதங்களுக்குப் பிறகு நீச்சல் குளத்தில் இறங்கிய யானை உற்சாக மிகுதியில் துதிக்கையால் தண்ணீரை உடலில் பீய்ச்சி அடித்தும், நீந்தியும் தண்ணீரில் உருண்டு, புரண்டும் உற்சாகமாக விளையாடி வருகிறது.
