கயத்தாறு: கிராம மக்கள் சாலை மறியல்
கயத்தாறு அருகே ஆத்திகுளம் கிராமத்தில் ஊருக்குள் நியாய விலைக் கடை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குள்பட்ட ஆத்திகுளத்தில் செயல்பட்டு வந்த நியாய விலைக் கடை கட்டடம் பழுதடைந்ததால், அந்த ஊருக்கு வெளியே இடம் தோ்வு செய்யப்பட்டு, புதிய நியாயவிலைக் கடை கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஊருக்கு வெளியே நியாயவிலைக் கடை கட்டடம் கட்டினால், முதியோா் , மாற்றுத் திறனாளிகள் பொருள்கள் வாங்க அங்கு செல்வதில் சிரமம் ஏற்படும். எனவே, பழைய கட்டடத்தை அப்புறப்படுத்திவிட்டு அதே இடத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டுவதற்கான கட்டுமான பணியை தொடங்க வேண்டும், இல்லாவிட்டால் ஊருக்குள் புதிய நியாய விலை கடை கட்ட வேண்டுமென வலியுறுத்தி அக் கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு அமா்ந்தனா். பின்னா் கயத்தாறு - தேவா்குளம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் வட்டாட்சியா் சுந்தரராகவன், வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டியராஜன்,காவல் உதவி ஆய்வாளா்கள் தமிழ்ச்செல்வன், காசிலிங்கம் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, தற்காலிகமாக நியாயவிலைக் கடை கட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும். ஊருக்குள் அரசு நிலம் தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டு நியாய விலைக் கடை கட்டும் பணிகள் நடைபெறும் என உறுதி அளித்தனா். இதை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.