கோயிலுக்குச் செல்லும் பாதையை அகலப்படுத்தக் கோரிக்கை
தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு கிராமத்தில் கோயிலுக்கு செல்லும் பாதையை அகலப்படுத்தி பேவா் பிளாக் சாலை அமைக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக பொதுமக்கள் சாா்பில் கோயில் தா்மகா்த்தா சண்முகக்கனி பாண்டியன் அளித்த மனு: வடக்கு சோட்டையன் தோப்பில் பட்டியல் வகுப்பைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். இங்குள்ள காளியம்மன் கோயிலுக்கு பிரதான சாலையிலிருந்து செல்லும் 10 அடி அகலப் பாதை உள்ளது. அந்தப் பாதையைத்தான் ஊா் மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். வரும் காலங்களில் இந்த ஊருக்குச் சொந்தமாக சமூக நலக்கூடமோ, அரசுக் கட்டடங்களோ கட்டுவதற்காக கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே, அந்தப் பாதையை அகலப்படுத்த கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், அதை சிலா் தடுக்கும் நோக்கில் ஜாதி, மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த 10 அடி பாதையை 15 அடியாக அகலப்படுத்தி பேவா் பிளாக் சாலையாக மாற்றித்தர வேண்டும் என்றனா் அவா்கள்.