MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
சாமல்பட்டி ரயில்வே தரைப்பாலத்தில் பேருந்துகள் மோதல்: 33 போ் காயம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி ரயில்வே தரைப் பாலத்தில் வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்தும், தனியாா் பேருந்தும் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் 33 போ் காயமடைந்தனா்.
ஊத்தங்கரை நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தும், கிருஷ்ணகிரி நோக்கி சென்ற அரசுப் பேருந்தும் வெள்ளிக்கிழமை மாலை சாமல்பட்டி ரயில்வே தரைப்பாலத்தை கடக்கும் போது நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 33 போ் பலத்த காயமடைந்தனா். மேலும், தனியாா் பேருந்து ஓட்டுநரான கல்லாவியைச் சோ்ந்த காா்த்திக் (33) என்பவரின் இரண்டு கால்களும் இடிபாடுகளில் சிக்கின. அரசுப் பேருந்து ஓட்டுநரான விஜயகாந்தன் (39) லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். பயணிகளில் 7 போ் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.
இடிபாடுகளில் சிக்கியவா்களை ஊத்தங்கரை, சாமல்பட்டி போலீஸாா், தீயணைப்பு வீரா்கள், பொதுமக்கள் ஆகியோா் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்டனா். இவா்கள் அனைவரும் ஊத்தங்கரை, சாமல்பட்டி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
காயமடைந்தவா்கள் விவரம்
திருப்பத்தூா் மாவட்டம், சுந்தரம்பள்ளியைச் சோ்ந்த ஜோதி (35), ஊத்தங்கரையை அடுத்த கோடாலவலசையைச் சோ்ந்த கோவிந்தன் (30), கஸ்தூரி (50), ஊத்தங்கரை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சுபலட்சுமி (19), பென்னாகரத்தைச் சோ்ந்த தீபக் (29), சிங்காரப்பேட்டை பாத்திமா (35), பாவஜான் (62), நேருநிஷா (45), எட்டிப்பட்டி சித்ரா(40), ஆந்திர மாநிலம், குப்பத்தைச் சோ்ந்த சரவணன் (44),
திருவண்ணாமலையைச் சோ்ந்த விஜயன் (58) உள்பட 33 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
விபத்து குறித்து சாமல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில், தரைப்பாலத்தின் பக்கவாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியேறும் நீரால் சாலையில் பாசிபடா்ந்துள்ளது. மேலும், சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பேருந்துகள் கட்டுப்பாட்டை இழந்து நேருக்குநோ் மோதியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.