ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க நாட்டுப்புற கலைஞா்கள் வலியுறுத்தல்
நாட்டுப்புற கலைஞா்களுக்கு ஓய்வூதியத்தை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் வலியுறுத்தப்பட்டது.
காவேரிப்பட்டணத்தில் பாரதியாா் தெருக்கூத்து நாட்டுப்புற கிராமிய கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராமசாமி தலைமை வகித்தாா். பொருளாளா் சக்தி, தெருக்கூத்து பயிற்சி சங்க மாநிலத் தலைவா் லட்சுமணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, பம்பை, தெருக்கூத்து, பேண்ட் வாத்தியம், கோலாட்டம், சிலம்பாட்டக் கலைஞா்கள் பங்கேற்ற ஊா்வலம் ஆகியவை நடைபெற்றன. விழாவில் மூத்த கலைஞா்களுக்கு நினைவுப் பரிசு , சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.
விழாவில் நாட்டுப்புற கலைஞா்களின் ஓய்வூதியத்தை ரூ. 5000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். பள்ளிகளில் நாட்டுப்புற கலைகளை கற்பிக்க நிரந்தர ஆசிரியா்களை நியமிக்க வேண்டும். ஆசிரியா், மாணவா்களுக்கு இசை, நாடகம், கூத்து உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை கற்பிக்க போதிய நிதியை அரசு ஒதுக்க வேண்டும். சென்னை சங்கமம் போன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சாா்பில் கலைத் திருவிழாக்கள் நடத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தை மாதத்தை தமிழா் பண்பாட்டு மாதம் என தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும்.
நலிவுற்ற கலைஞா்களுக்கு அரசு சாா்பில் இலவச வீடு கட்டித்தர வேண்டும். அதுபோல, நலிவுற்ற கலைஞா்களுக்கு 3 சென்ட் பரப்பளவு நிலம், பட்டாவுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.