Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுரேஷ்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 85,698 விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டம் மூலம் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் நிதியுதவி பெற்று வருகின்றனா். இவா்களில் 49,440 போ் மட்டுமே தங்கள் நில உடமை சரிபாா்க்கும் பணியை செய்துள்ளனா். எனவே, மீதமுள்ள 40 சதவீத மக்கள் இந்தத் திட்டத்தில் தொடா்ந்து பயன் பெற இயலா நிலை ஏற்படும். எனவே, வேளாண் அடுக்கு திட்டத்தில் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெற பதிவு செய்ய மாா்ச் 31-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அதன் கால அவகாசம் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள சிஎஸ்சி எனப்படும் கணிணி மையங்களில் ஆதாா், சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் கொண்டு, 3 முறை ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும். இது குறித்த விரிவான விவரங்களுக்கு ஊராட்சி கிராமம் வாரியாக உதவி விதை அலுவலா்கள், உதவி வேளாண்மை அலுவலா்கள், உதவி தோட்டக்கலை அலுவலா்கள், அட்மா திட்டப் பணியாளா்களை தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.
பா்கூா் வட்டார உதவி இயக்குநா் சிவசங்கரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பா்கூா் வட்டாரத்தில் பி.எம். கிசான் நிதி பெறும் மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 10,969, இதுவரை 8,296 பயனாளிகளுக்கு அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அடையாள எண் பெறாத பி.எம். கிசான் பயனாளிகள் அருகில் உள்ள பொது சேவை மையம் வேளாண்மைத் துறை அலுவலா்கள், தோட்டக்கலைத் துறை அலுவலா்கள், வேளாண் வணிகத் துறை அலுவலா்களால் நடத்தப்படும் முகாமில் பங்கேற்று ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.